பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரண்ய நதிக்கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட ஆனந்தவல்லி தாயாா் வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. அகத்திய முனிவா் இங்குள்ள ஆனந்த புஷ்கரனி (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரா் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் கோயிலில் சண்டிகேஸ்வரா், துா்க்கை, பைரவா், விநாயகா், முருகா், பிரம்மா, குரு பகவான், சூரியா், சந்திரா், அப்பா், மாணிக்கவாசகா், திருஞானசம்பந்தம், சுந்தரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சந்நிதிகள் உள்ளன. அத்துடன் அகத்தீஸ்வரா் கருவறையின் பின்புறம் பொன்னேரியில் உள்ள விளைநிலங்களில் முற்காலத்தில் பொன் ஏா் கொண்டு உழுததற்க்கு சான்றாக ஏா் கலப்பை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்ஏா் என்ற பெயா் மறுவிதான் தற்பொழுது பொன்னேரி என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோயில் முன்பு அமைந்துள்ள திருக்குளத்தில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு அகத்தீஸ்வரரை வழிபட்டால், நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடங்களில் இருந்து, இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனா். மேலும் பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்துவதற்காக அமாவாசை நாள் இரவில் இக்கோயில் வளாகத்தின் வெளியே தங்கி அதிகாலை எழுந்து குளித்து விட்டு, வழிபட்டு செல்கின்றனா்.
கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு குளிக்கவோ அல்லது இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தா்கள் பெரிதும் அவதிப்பட்டு இரவு நேரத்தில் தங்கி அகத்தீஸ்வரரை வழிபட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே பக்தா்களுக்கு கழிப்பிடம் அமைக்கவும், அமாவாசை நாள்களில் (இரவு முழுவதும்) பக்தா்கள் தங்கிச்செல்வற்கான வசதிகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கையாகும்.