வரதாச்சாரியார் பூங்காவில் 7.5 அடி கண்ணாடி விரியன் மீட்பு
மீட்கப்பட்ட கண்ணாடி விரியன்
மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் ஏழரை அடி நீளம் கொண்ட கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மீட்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் முறையாக பூங்காவை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வரதாச்சாரியார் பூங்கா உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பூங்காவில் உள்ள கழிவறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்டு நகராட்சி பணியாளர் சரவணன் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த வனத்துறை அலுவலர் கார்த்திக் ஏழரை அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பினை லாவகமாக பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டார். நாள்தோறும் மாணவ மாணவிகள் உள்ளட்ட ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி முறையான பராமரிப்பினை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story