தவறான கணக்கில் வரவு வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை - மீட்டு தர கோரிக்கை
மனு அளிக்க வந்த மாணவியின் தந்தை
ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த கல்லூரி மாணவியின் கல்வி உதவித்தொகையை மற்றொரு மாணவியின் வங்கி கணக்கில் வங்கி நிர்வாகம் வரவு வைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக்கோரி மாணவியின் தந்தை ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் ஊராட்சி சோத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவரது மகள் ராகசுதா தற்போது பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராகசுதாவும், ஐவநல்லூரை அடுத்த கொற்கை கிராமத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ரோஷினி என்ற மாணவியும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், ராகசுதாவுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்ட ரூ.63,500 தவறுதலாக ரோஷினியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை வங்கி கிளை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, ரோஷினியின் பெற்றோரிடம் கேட்டதற்கு அவர்கள் அந்த தொகையை தர மறுத்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறை ,ஆதிதிராவிட நலத்துறை ,வங்கி ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் மனு அளித்துவிட்டு உதவித்தொகை மீண்டும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அம்மாணவியின் தந்தை.
Next Story