பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நெருரில் காவிரி ஆற்றில் நண்பருடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நெருரில் காவிரி ஆற்றில் நண்பருடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், தெரசாநகர் பகுதி சேர்ந்தவர் ரமேஷ் மகன் சபரீஷ்வரன் வயது 16. இவர் கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு முடித்துவிட்டு வரும் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு செல்ல இருந்தார். இந்த நிலையில் அவரது பள்ளி நண்பர்கள் நான்கு பேருடன் மே 18ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் கரூர் அடுத்த நெரூர் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் நெரூர்- உன்னியூர் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் காவிரி ஆற்றில் குளித்த போது சபரீஷ்வரன் தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடன் வந்த சபரீஸ்வரன் நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், நெரூர் பகுதியில் வசித்து வரும் சந்தனதுரை என்பவருக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், தண்ணீரில் மூழ்கிய சபரீஷ்வரனை சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இந்த சம்பவம் அறிந்த இறந்த சபரீஸ்வரனின் தந்தை ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சபரீஸ்வரனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story