நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கம்
அடைப்பு நீக்கும் பணி
மயிலாடுதுறையில் 2007ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்தது. நகரம் முழுவதும் 12 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவைகளிலிருந்து அனுப்பப்படும் கழிப்பறைநீர் 3406 ஆள்நுழைவு த்தொட்டிமூலம் 8 கழிவு நீரேற்று நிலையங்கள் வழியாக வெளியேற்றப்டும் கழிவூநீர், ஆறுபாதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது.
மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஆள்நுழைவுத்தொட்டியில் அடைப்பு ஏற்பட்டால் மனிதர்கள் அந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரிசெய்துவந்தனர், கழிவுநீருக்குள் மனிதர்கள் மூழ்கி பணி செய்வதை உயர்நீதிமன்றம் கண்டித்ததாலும் ஒருசில நகராட்சிகளுக்கு அபராதம் விதித்ததாலும் ஆள் இறங்கி சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டனர்.
இதனால் மயிலாடுதுறையில் கடந்த 5 ஆண்டுகளாக ரயில்நிலையத்திலிருந்து தரங்கைச் சாலைவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆள்நுழைவுத்தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சாலையில் வழிய ஆரம்பித்தது, அவற்றை பைபாஸ் செய்து மாற்றுக்குழாய்மூலம் சரிசெய்தும் நகராட்சி நிர்வாகம் திணறி வந்தது. மனிதர்கள் இறங்கி சரிசெய்வதற்குப் பதிலாக ரிசைக்ளர் என்ற நவீன எந்திரம் இந்தப் பணியை கோவையில் செய்துவருகிறது.
மயிலாடுதுறை நகராட்சியில் இந்த நவீன எந்திரம் மூலம் ஒவ்வொரு ஆள்நுழைவுத்தொட்டியிலும் அடைப்பை எடுக்கும் பணிக்காக கோவை மாநகராட்சியிலிருந்து வாடகைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த எந்திரத்தின் பணி மயிலாடுதுறையில் நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் எம்.பி.ராமலிங்கம் முன்னிலையில் துவங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் செலவு ஆகும் குறைந்தபட்சம் 20 தினங்கள் இந்த தூர்வாரும் பணி நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக தலைவலியாக கிடந்த பிரச்னைக்கு தற்பொழுது முடிவுகாலம் வந்துள்ளதாக நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.,