பொள்ளாச்சியில் கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல்; 9 பேர் கைது

பொள்ளாச்சி கள்ள சந்தையில் விற்பனை செய்ய வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 1,322 மதுபாட்டில்கள் பறிமுதல்; இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி.. ஜூன்..25 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இதை அடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கேரளா மாநில எல்லை அருகில் அமைந்திருப்பதால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கடந்த 22 ம் தேதி ஆர் பொன்னாபுரம் பிரிவில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட செந்தில்குமார், விக்னேஷ் பிரபு, ஆனந்த் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர் முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வெளிமாநில மது பாட்டில்களை கடந்தி வந்து பொள்ளாச்சியில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும் இதில் பல பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

விசாரணையை தீவிரப்படுத்திய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பொள்ளாச்சி ராம் நகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த, விஜய், முருகன், முத்துப்பாண்டி, கார்த்தி, முகமது யாசிப்,சிவா உள்ளிட்ட ஒன்பது பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - 1 ல் ஆஜர் படுத்தினர்.

மேலும் தற்போது வரை 1322 மது பாட்டில்களும் ஒரு சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட ஒன்பது பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து ஒன்பது பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Tags

Next Story