வயிற்று வலியால் அவதி: விஷம் குடித்து தற்கொலை.

சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவருக்கு, திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பொரிக்கார தெருவை சேர்ந்தவர் காமாட்சி வயது 62. இவருக்கு சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே டிசம்பர் 20ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த காமாட்சி, எலி விஷ பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி ராதிகா வயது 56 என்பவர், உடனடியாக காமாட்சியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் காமாட்சி. இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா அளித்த புகாரின் பேரில், கரூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த காமாட்சியின் உடலை உடற் கூறாய்வுக்காக, சவக்கிடங்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story