ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரூர் மாவட்டம், தளவாய் பாளையம் பகுதியில் செயல்படும் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 7-வது கட்ட தேர்தல் முடிந்தவுடன் ஜூன் 4-ம் தேதி ஓட்டு பதிவுகள் எண்ணப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று செயல்படும் விதம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விளக்கம் அளித்தார்.
அப்போது, ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு பணியாற்றும் அலுவலர்கள், அன்று அதிகாலை 5 மணிக்கு, ஓட்டு என்னும் மையத்திற்கு அடையாள அட்டையுடன் வர வேண்டும் எனவும், மொபைல் போன், மின்னணு சாதனங்கள் மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்றும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 24 மணி நேரத்துக்கு முன் கணினி முறையில் அலுவலர்களுக்கு பணிபுரியும் சட்டசபை தொகுதி இறுதி செய்யப்படும் எனவும், ஓட்டு எண்ணிக்கை அன்று காலை 5 மணிக்கு பணிபுரியும் மேஜை எண் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அஞ்சல் ஓட்டு எண்ணிக்கையில் ஒரு ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், இரண்டு ஓட்டு எண்ணிக்கை உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் பணியில் இருக்க வேண்டும் எனவும், ஓட்டு எண்ணிக்கை பணியில் உள்ள அலுவலர்கள் நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆலோசனை வழங்கினார்.