களத்தில் குதித்த கலெக்டர்; வியாபாரிகள் உற்சாகம்
மயிலாடுதுறை நகரில் கலைஞர் காலனியை சேர்ந்த ரவுடி அஜித்குமார் (26) என்பவரை கடந்த 20 ஆம் தேதி இரவு திருஇந்தலூர் தெற்கு வீதியில் மர்ம நபர்கள் வெட்டி தலையை சிதைத்து கொடூரமாக படுகொலை செய்தனர். இந்த சம்பவம் கலைஞர் காலனி சேர்ந்த இருநூறு குடும்பத்தாரை சோகத்திலும் கோபத்திலும் தள்ளியது,
அஜித் குமார் கொலைக்கு அடிப்படை காரணம் கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறை வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொத்த தெருவை சேர்ந்த ரவுடி கண்ணன் என்பவரை கலைஞர் காலனியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் வெட்டி உடலை சிதைத்து கொடூர கொலை செய்திருந்தனர், அதில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கண்ணன் கொலை வழக்கில் ஆஜராகி வருகின்றனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த நபர்களில் இந்த அஜித்குமாரும் ஒருவர் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கையாக கொத்த தெருவை சேர்ந்தவர்கள்தான் இதற்கு காரணம் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். இதன் எதிரொளியாக நள்ளிரவில் அஜித்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை முன்பும் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் அமர்ந்தும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியல் விரிவடைந்தது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் வரை நாங்கள் அஜித்குமாரின் உடலை வாங்க மாட்டோம் மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்திருந்தனர்.
மயிலாடுதுறையில் போதிய போலீசார் இல்லாததாலும் பந்தோபஸ்துக்கு சென்றிருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்து வந்தனர் இதே நிலை 21 ஆம் தேதி முழுவதும் நீடித்தது நகரில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன கடைகள்மீது கல்லால் அடித்து மூட செய்தனர் .இதனால் நகரில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து பூட்டப்பட்டன போராட்டத்தை கைவிட கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், ஆனால் குற்றவாளிகள் கைது செய்யும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்று போராட்டத் தொடந்தனர். 21ம் தேதி காலைமுதல் மாலைவரை பயணிகளும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் குறித்த நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரின் முக்கிய வீதிகள் கலைஞர் காலனியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
21 ஆம் தேதி மாலையில் கொலை குற்றவாளிகள் என ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அப்பொழுதும் உடலை வாங்கிச் செல்ல வராமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 22 ஆம் தேதி காலையிலும் முக்கிய வணிக நிறுவனங்கள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டிருந்தன. இதைக் கேள்விப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் ஆர்டிஓ யுரேகா வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்புடை சூழ மயிலாடுதுறை நகரை ஒரு முறை சுற்றி வந்து பார்வையிட்டனர். பட்டமங்கல தெருவில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை நிறுத்தி கடைத்திறக்காமல் வாயிலில் காத்திருந்தவர்களை அழைத்து உடனடியாக கடையை திறக்கவும் நான் உரிய பாதுகாப்பு அளிக்கிறேன் என்று ஆட்சியர் கூறியதை கேட்டு நம்பிக்கையுடன் ஒவ்வொருத்தராக கடையை திறந்தனர்.
மாவட்ட ஆட்சியர் போலீஸிடம் கடிந்து கொண்டார், வணிக நிறுவனங்களை அடித்து உடைத்து அராஜகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், உடனடியாக இந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து நபர்களை கைது செய்யும் என்று கடுமையான உத்தரவிட்டார். நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பட்டமங்கலம் கடைவீதிக்கு வருகை தந்தார், டிஐஜி ஜியா வுல்ஹக் மற்றும் போலீசார் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர். படிப்படியாக அனைத்து வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டன, வர்த்தக சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளை பாராட்டிச் சென்றனர். ஒரு நாள் முழுவதும் நகரப்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியதற்கு நடவடிக்கை எடுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை அனைவரும் பாராட்டி சென்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு வைக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் உடலை வாங்கிச் சென்ற கலைஞர் காலனி மக்கள் நல்லடக்கம் செய்தனர். மயிலாடுதுறையில் சகஜ நிலைமை திரும்பியது