அரிசிமாவில் கோலமிடும் பழக்கத்தை தொடரணும் !
குத்தாலத்தில் நடந்த கோலப்போட்டியில் பங்கேற்ற கலெக்டர் மகாபாரதி, அரிசிமாவில் கோலமிடும் பாரம்பரியத்தை தொடர முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வேதபாரதி மற்றும் குத்தாலம் மங்கள சக்தி ஸமிதி சுபிக்ஷா ஹிந்தி வித்யாலயா இணைந்து நடத்தும் மார்கழி மாத கோல போட்டி, மற்றும் தீந்தமிழ் பாசுரங்கள் திருப்பாவை மனப்பாடப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு கோல போட்டி, திருப்பாவை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் முதல் பரிசு பட்டுப்புடவையும் இரண்டாவது பரிசு வெள்ளி காமாட்சி விளக்கும் மூன்றாவது பரிசு எலக்ட்ரிக் கேண்டில் என வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது. பெண்கள் கோலமிடுவது மிகவும் நன்று. அப்போதுதான் நம் மூளை சுறுசுறுப்பாக நல்ல உற்சாகமாக நரம்பு மண்டலங்கள் தூண்டப்பட்டு மூளைத்திறன் அதிகரிக்கும். இப்போதெல்லாம் கெமிக்கல் மாவு கலந்த கோலம் இடுகிறார்கள், அந்த கால பெண்கள் மாக்கோலம் என சொல்லக்கூடிய அரிசி மாவு கோலம் இடுவார்கள். இதனால் எறும்புகள் பூச்சிகள் குருவிகள் அதை உண்டு உயிர் வாழும். இதைப் போன்று தமிழ் மரபுகளை மீட்டெடுத்து கெமிக்கல் கோலம் இட வேண்டாம். மாக்கோலம் இடங்கள் என அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தமிழ் பாடல்களையும் சிறுவயதிலேயே பாடத் தொடங்கி மூளை திறனை அதிகரிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.