பொன்னேரியில் வீணாகும் ரேஷன் கடை கட்டடம்
பொன்னேரியில் ரேஷன் கடை கட்டடிடம்
பொன்னேரி என்.ஜி.ஓ., நகர் பகுதியில், 2016ல், திருவள்ளூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 7.41 லட்சத்தில் நியாயவிலை கடை கட்டப்பட்டது. கட்டடம் கட்டப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த, 2019ல் கட்டடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
கட்டடத்திற்காக செலவிடப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. என்.ஜி.ஓ., நகர், கும்மமுனிமங்களம் பகுதிவாசிகள், ரேஷன் பொருட்கள், வாங்க, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரி - செங்குன்றம் சாலையில், அரசு பேருந்து பணிமனை அருகே உள்ள நியாயவிலை கடைக்கு சென்று வருவதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.கட்டடம் கட்டப்பட்ட இடம், அங்குள்ள சுடுகாடு நிலத்தினை உள்ளடக்கி அமைந்ததால் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வருவாய்த்துறையின் நிலத்தின் வகைப்பாடு மாற்றம் செய்து, கூட்டுறவுத் துறைக்கு கடிதம் அனுப்பியது.
கூட்டுறவுத்துறையினர் ஒப்புதல் அளித்து, பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், கட்டடம் வீணாகி வருவதுடன், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் நீண்டதுாரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் நிலையும் தொடர்கிறது. கூட்டுறவுத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.