கரூரில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய நடனம்
பாரம்பரிய நடனம் ஆடிய பெண்கள்
கரூரில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய நடனம். பங்குனிஉத்திர பெருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு அலங்காரவல்லி அம்பாள், அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவிலில், நேற்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கோவிலின் வளாகத்தின் முன்பு கொங்கர் கலை பண்பாட்டுக் குழு சார்பில் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரம்பரிய கலையான வள்ளி கும்மி நிகழ்ச்சியை மீண்டும் புதிய தலைமுறை மக்களிடம் கொண்டுவரும் உன்னத நோக்கோடு இந்த கலைகள் தொடர்ந்து, ஆங்காங்கே கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு, கொங்கு பண்பாட்டு குழு சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேங்கலன் ரவிக்குமார் தலைமையில் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பொது செயலாளர் வேங்கை செல்வம், நிறுவன தலைவர் வாளவந்திநாடு சரவணன், துணைத்தலைவர் பசுவை பென்னரசு, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
இந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் தங்களுடைய பாரம்பரிய கலையை போற்றும் வகையில் இறைவனுக்கு பிடித்த இறை பாடலை பாடி, அதற்கேற்றவாறு நடன அசைவுகளை அமைத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்னர். இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர், இளம்பெண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பாரபட்சமில்லாமல் அனைத்து தரப்பினரும்,
இந்த வள்ளி கும்மி நடனத்தில் பங்கேற்று தங்களது பண்பாட்டு கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் மீண்டும் பறைசாற்றி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.