வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

கரூர் அடுத்த காதப்பாறை ஊராட்சியில் உள்ள நவநீதகிரி என்னும் வெண்ணைமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் புதுப்பிக்கும்பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் மங்கள இசை உடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

இதனை தொடர்ந்து விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், பிம்மசுத்தி, ரக்ஷா பந்தனம், ஸ்பர்ஷாகுதி, ஆறாம் கால யாக பூஜை, ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு மகா தீபாரணையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, தலையில் சுமந்தவாறு சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு அமைக்கப்பட்டு இருந்த கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர்.

நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 5,000 மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story