நாட்டை காக்க தொடர்ந்து போராடுவோம் - ஜோதிமணி சூளுரை
ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பு
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போராடியதை போலவே,நாட்டை காப்பாற்ற போராடுவோம். வெற்றி பெற்ற வேட்பாளர் ஜோதிமணி கரூரில் பேட்டி. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,34,906- வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 3,68,090- வாக்குகள் பெற்றார். பிஜேபி செந்தில்நாதன் 1,02,482 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 87,503 வாக்குகள் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி, ஊடக பலம், அரசியல் பின்பலம் இல்லாமல், உண்மையையும், உழைப்பையும், மக்களையும் நம்பி களத்தில் இறங்கி போராடி வெற்றி பெற்றோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை அழிவு பாதைக்கு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு சென்றதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். தலைவர் ராகுல் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட நடை பயணம் மக்களிடம் எழுச்சியை பெற்றது.
பெரிய அளவில் வன்முறைக்கு இடமான மணிப்பூரில் இரண்டு இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்தியாவிலேயே போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் சென்று மகத்தான வெற்றியை பெற்ற முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார் என்ற அவர், தேர்தலில் வெற்றி பெற எப்படி போராடினமோ, அதே போல, இந்திய மக்களை காக்கவும், இந்தியா கூட்டணி அரசை அமைக்கவும் நாளை முதல் போராடுவோம் என்றார்.