பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானைகள்

பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானைகள்

உலா வந்த காட்டு யானை

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானைகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.. வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக ஆறுகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி கடந்த சில தினங்களாகவே வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வால்பாறை சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது.. குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகிறது இந்த யானைகள் இரவு நேரத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை உடைத்து உள்ளே உள்ள பொருட்களை சூறையாடி சாப்பிட்டு சென்று வருகிறது.

இந்நிலையில் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சோலையார் அணை பகுதியில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உணவைத் தேடி உலாவும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்த யானையின் நடமாட்டம் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

மேலும் வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதேபோல் மீண்டும் யானைகள் வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க தொடர்ந்து கேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.. அதேபோல் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு 7 மணிக்கு மேல் தங்கும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் வனத்துறையினரின் எச்சரிக்கை மீறி வெளியில் சுற்றுவார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story