அரசு வேலை கேட்டு, எம்பி யிடம் கண்ணீருடன் பெண் முறையீடு

அரசு வேலை கேட்டு,  எம்பி யிடம் கண்ணீருடன்  பெண் முறையீடு

எம்பியிடம் முறையீடு 

கரூரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அரசு வேலை கேட்டு கண்ணீருடன் பெண் ஒருவர் எம்பி ஜோதிமணியிடம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு துறையில் தற்காலிக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பணி முடிந்தவுடன், அவரிடம் அரசு தற்காலிக பணி நிறைவு பெற்றதாக கூறி அனுப்பி விட்டனர். இதனிடைய அவரது கணவரும் காலமாகிவிட்டதால், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வந்துள்ளார்.

இதனால், அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்த சித்ரா, தனக்கு தற்காலிக வேலையாக இருந்தாலும் அரசு வேலை வேண்டும் என கேட்க முற்பட்டுள்ளார். அதற்குள்ளாக வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சி முடிந்து மாவட்ட ஆட்சியர் சென்று விட்டதால், அவருக்கு பின்னால் வந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம், கண்ணீரோடு தனக்கு வேலை வேண்டும் எனக் கேட்டு மனுக்களை கொடுத்து முறையிட்டுள்ளார். இதனால், அப்போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. அவரது நிலை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அவருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு சித்ராவிடம் மனுக்களை பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளார். மாவட்ட ஆட்சியரும், தற்போது தற்காலிக அரசு பணி ஏதும் நிரப்பப்படவில்லை. அதற்கான வாய்ப்பு வரும்போது, அவர்களுக்கு அந்த வேலை வாய்ப்பை வழங்கலாம் என உறுதி அளித்தார். இந்த தகவலை சித்ராவிடம் தெரிவித்ததால் அவரும் நம்பிக்கையோடு வீடு திரும்பினார்.

Tags

Next Story