இரும்பு தளவாட பொருட்களை களவாடிய இளைஞர் கைது !
காவல்துறை
பூட்டிய நிறுவனத்திற்குள் இருந்த இரும்பு தளவாட பொருட்களை களவாடிய இளைஞர் கைது. கரூர் மாவட்டம், சனப்பிரட்டி அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்து கருப்பன் மகன் காத்தவராயன் வயது 53. இவர் அருகில் உள்ள வடக்கு பாளையம் பகுதியில் சிமெண்ட் தூண்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கண்ட நிறுவனத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் நிறுவனத்தை பூட்டி வைத்திருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அருகே உள்ள குருவித்துறை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் ரஞ்சித் வயது 19 என்பவர் மார்ச் 27 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் காத்தவராயன் நிறுவனத்தின் முன் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சிமெண்ட் தூண்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இரும்பினால் ஆன சுமார் 25 கிலோ எடையுள்ள தளவாட பொருட்களை களவாடி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த காத்தவராயன் இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக இரும்பு தளவாடப் பொருட்களை களவாடிய ரஞ்சித்தை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர், மேலும் களவாடப்பட்ட இரும்பு தளவாட பொருட்களின் மதிப்பு ரூபாய் 5000 என மதிப்பீடு செய்த காவல்துறையினர், கைது செய்த ரஞ்சித்தை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.