முறையற்ற வியாபாரம் செய்த நிறுவனத்திற்கு 2 லட்சம் அபராதம்.

முறையற்ற வியாபாரம் செய்த நிறுவனத்திற்கு 2 லட்சம் அபராதம் வழங்கி கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றம் தீர்ப்பு.

கரூர் மாவட்ட சம நீதிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை. இவரது மனைவி வெண்ணிலா 30.09.2020 அன்று, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் உள்ள சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தில் கோத்ரேஜ் பிரிட்ஜ் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதற்கான தொகைக்கு பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் 9,506 ரூபாய் கடனாகப் பெற்று மாதாமாதம் ரூபாய் 1334 தவணையாக செலுத்த ஒப்புக்கொண்டார். அதன்படி மேற்படி வெண்ணிலாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1334- பிடித்தம் செய்வதற்கு பதிலாக, ஒவ்வொரு மாதமும் ரூபாய் 350 அதிகமாக மேற்படி நிறுவனம் பிடிக்க ஆரம்பித்தது. அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வெண்ணிலா விசாரித்த போது, அது இன்சூரன்ஸ் தவணைத் தொகை என்று சொல்லப்பட்டது. பிரிட்ஜ் விற்பனையில் ஈடுபட்டு வரும் சத்யா நிறுவனத்தில் இது குறித்து விசாரித்த போது, ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு வாரண்டி, கேரண்டி உள்ளது.எனவே இந்த மெஷினுக்கு இன்சூரன்ஸ் தேவையில்லை என்று தெளிவுபடுத்தினர். எனவே, இன்சூரன்ஸ் பணம் பிடிக்க வேண்டாம் என்று வெண்ணிலா பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் தெரிவித்தார். வெண்ணிலாவின் கோரிக்கையை ஏற்காமல், தொடர்ந்து இன்சூரன்ஸ் தவணை பணம் என்று, மாதா மாதம் 350 பிடித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மூலமாக, வெண்ணிலா கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் சேவையில் குறைபாடு உள்ளது. மற்றும் முறையற்ற வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என கூறி,பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் மனுதாரர் வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

Tags

Next Story