ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு - ஜே.பி நட்டா
நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி அடைவதற்காக பல்வேறு யூகங்களை கையாண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் பிஜேபி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா.இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஜே பி நாட்டா, கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் போன்ற சூழல்களில் உலகின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் 11 வது இடத்தில் இருந்தது. அமெரிக்க, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் எல்லாம் நிலைத்தடுமாறி கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரதமர் மோடியின் முயற்சியால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடியை தேர்வு செய்யும்போது இங்கே செந்தில் நாதனும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவார் எனக்கூறிய அவர், இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சித் தலைவர்களின் பெயரைக் கூறி அவர்கள் வாரிசுகள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்திற்கு வருவதையும் அதன் மூலம் ஊழல் பெருகி உள்ளதையும் சுட்டிக் காட்டிய நட்டா, இந்தியாவினுடைய வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். எனவே மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை நாம் பிரதமர் ஆக்க வேண்டியது வளர்ச்சியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என கூறினார்.