வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தாலும் லட்சிய பயணம் வெற்றி தரும்
மயிலாடுதுறையில் அஸ்ட்ரோ டர்ப் விக்கெட் மையத்தை திறந்து வைத்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.
மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற விமேக்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட 1 அஸ்ட்ரோ டர்ப் விக்கெட் மற்றும் 2 கிரிக்கெட் பிராக்டிஸ் நெட் ஆகியன திறக்கப்பட்டது. அஸ்ட்ரோ டர்ப் விக்கெட்டினை சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜனும், கிரிக்கெட் பிராக்டிஸ் நெட்டினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவும் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்து தான் சாதித்த கதையினை மாணவர்கள் மத்தியில் மனமுருக பேசினார் நடராஜன். அவர் கூட்டத்தில் பேசியதாவது:
பள்ளியில் படிக்கும் போது வறுமையின் காரணமாக ஷூ கூட வாங்க முடியாத நிலையில், வெறும் கால்களுடனே மூன்று வருடங்கள் பிராக்டிஸ் செய்தேன். வீட்டில் நல்ல உணவு கூட கிடையாது. பெற்றோர்கள் கூலி வேலை தான் 5 பேரை வளர்த்தனர்.
நாம் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெற்றால் அதை யாரும் ஊக்குவிக்க மாட்டார்கள். எதிர்மறையான எண்ணத்தை தான் விதைப்பார்கள். அதேபோலதான் எனக்கும் செய்தனர். அன்று அவ்வாறு பேசியவர்கள்கூட இன்று நான் வெற்றியடைந்த உடன் நான் நிச்சயமாக வளருவேன் என அப்போதே தெரியும் என இப்போது கூறுகின்றனர். நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும் அதில் கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும். எனவே நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை குறித்து பயணம் செய்யுங்கள்.
இன்றைய தலைமுறை மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்தாமல் செல்போன் மோகத்தில் உள்ளனர். மாணவர்கள் விளையாட்டு, படிப்பு இரண்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். நான் போதிய படிப்பின்மை காரணமாக மொழி பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். பள்ளியில் படிக்கும்போது செங்கல் சூளை, கட்டட வேலை, ரோடு போடும் வேலை என பல வேலைகளை செய்துள்ளேன். இதையெல்லாம் தடையாக எண்ணக்கூடாது. விளையாட்டுக்கு தடை நம் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள்தான். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் சுதந்திரத்தை தவறான வழியில் பயன்படுத்தாமல் தங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். கிரிக்கெட்டில் நான் வாங்கிய கோப்பைகளை வைக்க, நான் வசித்த சிறிய வாடகை வீட்டில் இடம் இல்லாமல் 400-க்கும் மேற்பட்ட கோப்பைகளை நண்பர்கள் வீட்டில் வைத்திருந்தேன்.
வாழ்வில் கஷ்டங்கள் இருந்தாலும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும்போது அது நிச்சயம் வெற்றி தரும். அந்த வெற்றி தரும் மகிழ்ச்சி அளப்பரியது. எல்லாத் துறைகளிலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் அதை பெறுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் எனது சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் தொடங்கியதற்கு காரணம் சுற்றுவட்டார கிராமமக்கள் அதனால் பயனடைய வேண்டும் என்பதே.
.விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, அனைவருமே உடலை ஆரோக்கியமாக பேணி பாதுகாக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை விடக்கூடாது. தோல்விகளை சந்திக்கும் போது தான் அடுத்த நிலையை எட்ட முடியும். எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும் என்று பேசினார்.