16 வயது சிறுமிக்கு திருமணம் - இளைஞர் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரும் அவரை கடத்திய இளைஞரும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி நாட்டார்த் தெருவைச் சேர்ந்தவர் தவசிமுத்து மகன் உதயகுமார் (வயது 22) கல்லூரி மாணவன் இவர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்ததை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை வேறொரு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த மே மாதம் 26-ம் தேதி மயிலாடுதுறை அருகே மாரியம்மன்கோவில் ஒன்றில் சிறுமிக்கும் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் ரஞ்சித் (24) என்ற வாலிபருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த திருமணத்தை விரும்பாத சிறுமி தனது காதலன் உதயகுமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனையடுத்து உதயகுமார், கடந்த 9-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குஇருசக்கர வாகனத்தில் சென்று, மயிலாடுதுறை அருகே வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.

புகாரையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பில் உள்ள மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், உதயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் வழக்கு தொடர்பாக சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த ரஞ்சித்தின் தந்தை கொளஞ்சி, தாயார் செல்வி மற்றும் சிறுமியின் தாய், தந்தை என 4 பேரையும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story