மயிலாடுதுறை : கேமராவில் பதிவான சிறுத்தையின் நடமாட்டம்

மயிலாடுதுறை : கேமராவில் பதிவான சிறுத்தையின் நடமாட்டம்

சிறுத்தை

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிப்பதற்காக வனத்துறையினரால் அமைக்கப்பட்ட அதிநவீன கேமராவில் பதிவான சிறுத்தையின் படத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மயிலாடுதுறையில் ஏப்.2-ஆம் தேதி முதல் சுற்றித்திரியும் சிறுத்தையின் புகைப்படம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 1,000 ஹெக்டர் அளவில் காப்புக்காடுகள் உள்ளது. இவை அனைத்தும் பெரும்பாலும் கடலோர வனப்பகுதிகளாக உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் நரி, புள்ளிமான் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. இதுவரை மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை போன்ற விலங்குகள் காணப்பட்டதாக தகவல்கள் இல்லை.

இந்நிலையில் ஏப்.2-ஆம் தேதி மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை போன்ற விலங்கு பதிவாகி இருந்ததை அறிந்து காவல் துறையின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடனடியாக வனத்துறையின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு, முதல் நடவடிக்கையாக சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக தானியங்கி கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டன. அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமரா மூலம் ஏப்.3-ஆம் தேதி இரவு சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்று உறுதி செய்யப்பட்டது.

சிறுத்தையானது மனித அருகாமையை தவிர்க்கும் விலங்கு என்பதாலும், சிறு விலங்குகளையே வேட்டையாடும் தன்மை கொண்டதாலும், பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், தேவையற்ற மற்றும் அச்சம் தரக்கூடிய தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மனித நடமாட்டத்தை தவிர்க்குமாறும் கண்டிப்பாக 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் கள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், கூட்டம் சேர்ந்து கள நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாது இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்துடன் சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்வித தகவல் கிடைத்தாலும் வனத்துறைக்கு, வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியலை 9994884357, என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கிராம அளவில் இளைஞர்கள் தன்னார்வத்துடன் கிராம ஒத்துழைப்பை உறுதி செய்யுமாறும், அரசு துறைகளின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாய் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story