வேள்பாரி நாவல் காட்சிகள் திருடப்படுவதாக இயக்குநர் ஷங்கர் பரபரப்பு குற்றசாட்டு !!

Update: 2024-09-23 09:09 GMT

இயக்குநர் ஷங்கர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடப்படும் வேறு பல வரலாற்று புனைவு கதைகள் கொண்ட நாவலை திரைப்படமாக்க பலரும் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை திரைப்படமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதனை பிரமாண்ட இயக்குநர் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷங்கர் இயக்க உள்ளதாக சில வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் வேள்பாரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "வேள்பாரி கதையை நிறைய பேர் என்னை படிக்க சொல்லி வந்தனர். கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த நேரத்தில் அதை படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க வேள்பாரி என் மனதில் காட்சிகளாக விரிந்தது. படித்து முடித்ததும் இதை எப்படியாவது படமாக பண்ண வேண்டும் என தோன்றியது. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசனை தொடர்பு கொண்டு, அதுக்கான ரைட்ஸ் வாங்கி, 3 பார்ட்டாக திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன். யார் நடிக்கிறார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வேள்பாரி நாவல் காட்சிகள் திருடப்படுவதாக இயக்குநர் ஷங்கர் இன்று (செப்டம்பர் 22) பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவரின் கவனத்திற்கு.. பலரும் சு.வெங்கடேசனின் நாவலான 'வீரயுக நாயகன் வேள்பாரி'யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன். நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள்.

படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்" என சங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள தேவரா மற்றும் சூர்யாவின் கங்குவா டிரைலர், டீசர் காட்சிகள் வெளியாகியிருந்தது. இவற்றில் எதை ஷங்கர் குறிப்பிட்டு எச்சரித்துள்ளார் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News