பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் - இன்று இறுதிசடங்கு !!
சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் டெல்லி கணேஷ் ( வயது 80) நேற்று இரவு உயிரிழந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது, சின்னதிரையிலும் தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் சேர்த்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் குணச்சித்ர வேடங்களிலேயே ஏற்று நடித்த இவர் ஓரிரு படங்களில் கதையின் நாயகனாகவும், பல படங்களில் காமெடி வேடங்களிலும், சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், பசி படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றார். டெல்லி கணேஷிற்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நல பிரச்னை இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். சென்னை, ராமபுரம் வீட்டில், பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச்சடங்கு இன்று காலை 10 முதல் 11 மணிக்குள் நடக்கும். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.