ஜெயம் ரவியின் 'சைரன் ' !
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது, 'சைரன்'. இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , " இந்த படம் எனக்கு முக்கியமான படம். மாநகரம் படத்திற்கு பிறகு இப்படியான சப்ஜெக்ட்ல ஒரு படம் பண்றேன். இயக்குநர் ஆண்டனிகிட்ட இருந்து இந்த மாதிரியான கதை நான் எதிர்பார்க்கவேயில்ல. இந்த படத்தோட கதை சீரியஸாக இருக்கும். வளர்ந்து வர்ற டெக்னீசியன்களை சுதந்திரமாக ஜெயம் ரவி வேலைப் பார்க்க விடுவாரு. இந்தப் படம் இந்த வருஷத்துக்கான முக்கியமான படமாக இருக்கும். " என்றார் இவரைத் தொடர்ந்து வந்து பேசிய படத்தொகுப்பாளர் ரூபன், " கதைக்கு மட்டும் முக்கியம் கொடுத்து பல இயக்குநர்களுக்கு வழி அமைத்த ஜெயம் ரவி சாருக்கு நன்றி. அழகம் பெருமாள் வில்லத்தனத்துல காமெடி பண்ணுவார். இன்னைக்கு இந்தியாவுல முக்கியமான நடிகர் சமுத்திரக்கனி. " எனப் பேசி விடைபெற்றார். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, " சினிமாவுல எல்லாம் தெரிந்தவர்கள் குறைவுதான். ரவிக்கு எல்லாமே தெரியும். அவருக்கான திறமைக்கு இன்னும் பெரிய இடங்கள் காத்திருக்கு. ஜெயம் ரவிகூட 100 படங்கள்கூட பண்ணலாம். ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணமா இருக்கும்." எனக் கூறினார்.
இறுதியாக வந்து பேசிய ஜெயம் ரவி, " ரொம்ப மகிழ்ச்சியான மேடை இது. இந்த படம் நல்லபடியாக வந்திருக்குன்னு நினைக்கும்போது மகிழ்ச்சி.
அதுக்குப் பிறகுதான் கீர்த்தி சுரேஷ் படத்துக்குள்ள வந்தாங்க. கிளைமேக்ஸ் பார்க்கும் போது இந்த படத்தோட உணர்வு தெரியும். கீர்த்தி சுரேஷ் அவங்களோட கதாபாத்திரத்துல ரொம்பவே நல்லா பண்ணியிருக்காங்க. சமுத்திரகனியோட இப்போதான் முதல் படம் நடிக்கிறேன். அழகம் பெருமாள் சார்கூட நான் அடங்கமறு படத்துல ஏற்கெனவே வேலை பார்த்திருக்கேன். இயக்குநர் ஆண்டனியை இன்னும் சிறந்த மேடைக்கள்ல பார்ப்பீங்க. இது எமோஷனல் படம். இந்த படம் நான் ரசிச்சு பண்ணேன். யோகி பாபுவும் நானும் இந்த படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல ஒண்ணாகதான் இருந்தோம். 'கோமாளி' படம் மாதிரி எனக்கும் அவருக்கும் நல்ல காம்பினேஷன் இந்த படத்துல இருக்கும்." என முடித்துக் கொண்டார்.