Big Boss 7 : பிக்பாஸில் இருந்து வெளியேறும் கமல்...அரசியலுக்கு ஆபத்தா..?
தமிழகத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசன்களிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் செல்லும் பிக்பாஸ் சீசன் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது.
இந்த சீசனில் திரை பிரபலங்கள் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், யூடியூப் பிரபலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பிக்பாஸ் சீசன் 7ல் 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தமாக 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதில், ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் சர்ச்சைகளில் சிக்கிக் பேசப்படும் கூல் சுரேஷ், சன் டிவி சீரியலில் தொடங்கி ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, ராட்சசன் படங்களில் நடித்த ரவீனா, துணை இயக்குநரும், நடிகருமான பிரதீப் ஆண்டனி, பாரதி கண்ணம்மா சீரியலில் பேசப்பட்ட வினுஷா, விஜய் டிவியின் ஜோடி சீசன் 9 டைட்டில் வின்னர் மணி, லவ் டுடே படத்தில் நடித்த அக்ஷயா, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, முன்னாள் பிக்பாக் போட்டியாளர் அமீரின் தங்கை ஐஷூ, ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலம் பிரபலமா விஷ்ணு விஜய், மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, விக்ரம் படங்களில் நடித்த மாயா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சரவண விக்ரம், பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன், நடிகை விசித்ரா உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியாளர்களாக களமிறங்கினர்.
இவர்கள் மட்டுமில்லாமல், கதை சொல்லியாகவும், எழுத்தாளராகவும், பேச்சாளாராகவும் அறியப்பட்ட பவா செல்லத்துரை, மாடலிங் துறையை சேர்ந்த விஜய் வர்மா உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
போட்டி தொடங்கிய முதல் வாரத்திலேயே விசித்ராவுக்கும், ஜோவிகாவுக்கும் இடையே அடிப்படை கல்வி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அடுத்ததாக, பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ ரெட்கார்டு தூக்கினர். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார். இதற்கிடையே நிக்சன் மற்றும் விஷ்ணு வினுஷாவை உருவத்தை வைத்து விமர்சனம் செய்ததும் சர்ச்சையானது.
ஒருமாதத்தில் வைல்டுகார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று நிக்சன் பேசியதும், மாயா மற்றும் பூர்ணிமா ஆண் போட்டியாளர்களை தரம்தாழ்ந்து விமர்சித்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதில் பிரதீப் வெளியேற்றப்பட்ட போது, அவர் தரப்பு நியாயத்தை கமல்ஹாசன் கேட்க தவறியதாக கமலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவின. மாயாவுக்கு ஆதரவாக கமல் பேசுவதாகவும், அர்ச்சனாவிடம் கமல் கடுமையாக பேசுவதாகவும் நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.
இந்த பிக்பாஸ் சீசன் 7 எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கமல்ஹாசனின் நடுநிலை தன்மையை டேமேஜ் செய்துள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் சீசனில் இருந்து கமல்ஹாசன் விலக இருப்பதாக பேச்சுகள் அடிப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் கமல்ஹாசன் தேர்தல் கவனம் செலுத்த இருப்பதால் அவர் பிக்பாஸ் சீசனில் இருந்து விலகலாம் என கூறப்படுகிறது.
அப்படி கமல்ஹாசன் பிக்பாஸ் சீசனில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி பார்த்தால் பிக்பாஸ் சீசனை வழங்கும் பிரபலங்களின் லிஸ்டில் விஜய் சேதுபதி, அர்ஜூன், மாதவன், சரத்குமார் பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துள்ளதால் இந்த சீசனை கமல்ஹாசன் நிறைவு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.