நரம்பியல் சிதைவு நோயால் பாதிப்பு - கேரளா நடிகை மரணம்...
பார்கின்சன் மற்றும் அல்சைமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபல மலையாள நடிகை கனகலதா (வயது 63) காலமானார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகை கனகலதா 1960 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது சிறு வயதிலேயே நாடகத்தில் நடித்து வந்தார். அதன் மூலமாக திரைப்படத்துறைக்கு வந்தவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் தமிழில் 12 படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டில் அவர் நரம்பியல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவரால் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. படுத்த படுக்கையாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது சகோதரி உடன் இருந்து கவனித்து வந்தார். அவரது மருத்துவ சிகிச்சைக்கு திரைப்பட அகாடமி மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் உதவி வந்தது. இந்நிலையில் நடிகை கனகா நோய் பாதிப்பு காரணமாக திருவனந்தபுரம் மாவட்டம் மழையின் கீழ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.