KH237: தீயாய் மிரட்டும் கமல் - வெளியானது KH237 படத்தின் மிரட்டல் அறிவிப்பு
கேஜிஎஃப் புகழ் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் KH237 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்
ரசிகர்களுக்கு பொங்கல் டிரீட்டாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் KH237 படத்தில் அப்டேட் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதன்படி இந்தியன் படம் வெளியாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் திரையுலகில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர்.
இருவரும் இணைந்து உருவாகும் படம் தக் லைஃப் என அறிவிக்கப்பட்டதுடன், அதன் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் டிரெண்டானது. மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லஷ்மி என பெரும் பட்டாளமே இணைந்துள்ளனர். இதற்கு எல்லாம் முன்னதாக ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் KH233 திரைப்படத்தில் கம்லஹாசன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
தமிழ் திரையுலகத்தில் நடித்து பிசியாக இருப்பது மட்டுமில்லாமல் பான் இந்தியா படத்திலும் கமல்ஹாசன் கமிட்டாகியுள்ளார். பாகுபலி பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமான உருவாகி வரும் கல்கி 2898 படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் KH237 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் KH237 படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும், KH237 படத்தை தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை சகோதரர்களான அன்பறிவ்( அன்புமணி, அறிவுமணி) மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர்களாக பிரபலமாகினர். கேஜிஎஃப் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்த இருவரும் தேசிய விருதை பெற்றனர். கேஜிஎஃப் மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து அசத்தியுள்ளனர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.