தெலுங்கு சினிமாவின் வாய்ப்பை இழக்கும் பிரகாஷ்ராஜ் - காரணம் யார் தெரியுமா?
தமிழ், தெலுங்கில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர துணை முதல்-மந்திரியும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதனால் தெலுங்கு படங்களில்
நடிப்பதற்கு பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. பவன் கல்யாண் சகோதரர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் உள்பட அந்த குடும்பத்தில் இருந்து பலர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். இதனால் பிரகாஷ்ராஜை அவர்கள் ஒதுக்குவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் பேசியதாவது, "சமூகத்தில் தவறு நடந்தால் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எனக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலைஏற்பட்டாலும், நான் கேள்வி எழுப்புவதை நிறுத்தவே மாட்டேன். என் மகன் மரணத்தின் போது வேதனையில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு எனக்கென ஒரு குடும்பம் இருப்பதை உணர்ந்து மீண்டும் எழுந்து சாதாரண மனிதனாக மாறினேன். எனது திறமையை பார்த்து ரசிகர்கள் ஆதரித்தார்கள். அவர்கள் அன்பினால்தான் நான் இன்றும் நடிகனாக நீடித்துக் கொண்டிருக்கிறேன்”என்று கூறியுள்ளார்.