குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளார் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-08-19 05:48 GMT

vice presidential candidate

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் கடந்த ஜூலை 21மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். 74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது , அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உடனே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (ஆக.20) அவர் வேட்புமணி தாக்கல் செய்ய உள்ளார். இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேற்று மாலை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் பங்கேற்ற திருச்சி சிவா இஸ்ரோ முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரையை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இரவு 8 மணிக்கு மேலும் நீடித்த ஆலோசனையில் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று ( ஆக.19) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று மதியம் 12.30 மணியலவில் நடைபெறவுள்ளது. வேட்பாளரைத் தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (ஆக.21) முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News