ஒரு பிரேசிலிய பெண் 22 முறை வாக்களித்துள்ளார்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி முன்னதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.;

Update: 2025-11-05 08:40 GMT

rahulgandhi

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி முன்னதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக மராட்டிய மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்து நடைபெற உள்ள பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக ராகுல் காந்தி பேசி வருகிறார். இந்த நிலையில், போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான ஆதாரங்களை ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், “அரியானாவில் ஆட்சித் திருட்டு நடந்துள்ளது. வாக்குத் திருட்டு நடக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், மின்னணு இயந்திர வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளது. அரியானாவில் ஏதோ தவறு இருப்பதாகவும், எதுவும் சரியாக நடைபெறவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர்களிடமிருந்து நிறைய புகார்கள் வந்தன. ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மராட்டிய மாநிலம் ஆகிய இடங்களில் இதை நாங்கள் அனுபவித்தோம். போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் அரியானாவில் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தனிப்பட்ட தொகுதிகளில் மட்டும் இல்லாமல், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Similar News