இன்று மும்பைக்கு ரெட் அலர்ட்: அதி கனமழை கொட்டும்..! பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம்!
வரலாறு காணாத மழையை சந்தித்து வருவதால், மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.;
Mumbai rain
மஹாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை கனமழை கொட்டித் தீர்க்கிறது. வானிலை மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கையில், மும்பையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடர்ந்து பெய்யும்.கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மும்பை, தானே, பால்கர், ராய்கட், ரத்னகிரி மாவட்டங்களில் கனமழை, சூறாவளி வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இன்று மழை வெள்ள நிலவரம் பற்றி பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் அதிகபட்ச உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார். இன்றும் (ஆக.20) அதி கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 253 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. மும்பை வர வேண்டிய 163 விமானங்கள் இன்னும் வந்து சேரவில்லை.6 இண்டிகோ விமானங்கள், ஒரு ஸ்பைஸ் ஜெட், ஒரு ஏர் இந்தியா விமானங்கள், சூரத், அகமதாபாத், ஐதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவதாக, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.''அவசியம் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து கனமழை பெய்வதாலும், தண்ணீர் தேக்கம் இருப்பதாலும், அவசியம் இருந்தால் மட்டும் பயணிக்கும்படியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மும்பைவாசிகளுக்கு ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது. அதிகளவாக விர்க்ஹோலியில் திங்கட்கிழமை மட்டும் 139.5 மிமீ மழை கொட்டியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாத மழை எதிரொலியாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வுகள் ஆக.23ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. வரலாறு காணாத மழையை சந்தித்து வருவதால், மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே என பல நகரங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.