100-வது ராக்கெட் வெற்றி..! முதல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சிகரம் தொட்ட ஸ்ரீஹரிகோட்டா | கிங் நியூஸ் 24x7

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, இன்று (ஜனவரி 29) அதிகாலை 6.23 மணிக்கு விண்ணில் ஜிஎஸ்எல்வி- எப்15 (GSLV- F15) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட் என்விஎஸ்-02 (NVS-02) என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. இந்த என்விஎஸ்-02 மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும், பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணனின் தலைமையில் நடந்த முதல் ராக்கெட் ஏவுதல் இதுவாகும்.
இந்த ஜிஎஸ்எல்வி-எஃப் 15 என்பது இந்தியாவின் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (ஜிஎஸ்எல்வி) 17வது விண்கலமாகும் மற்றும் உள்நாட்டு கிரையோ நிலை கொண்ட 11வது விண்கலமாகும். அதுமட்டுமல்லாது உள்நாட்டு கிரையோஜெனிக் நிலையுடன் ஜிஎஸ்எல்வியின் 8வது செயல்பாட்டு விண்கலம் இதுவாகும்
வி.நாராயணன், இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் என்பதால், இந்த ஏவுதல் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா ரேஞ்ச் (SHAR)
சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில், 43,360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்.முன்னர் ஸ்ரீஹரிகோட்டா ரேஞ்ச் (SHAR) என இந்த விண்வெளி ஆய்வு மையம் அழைக்கப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சதீஷ் தவான் நினைவாக, செப்டம்பர் 5, 2002இல் பெயர் மாற்றப்பட்டது. 1960களில், விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டன. அதன் அங்கமாக, நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் அல்லாமல், ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.1969இல் இதற்காக ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டது. காரணம் ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ளது. இதன் பயனாக, இங்கிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டால், அவை வினாடிக்கு 0.4 கி.மீ கூடுதல் வேகத்துடன் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 1440 கி.மீ கூடுதல் வேகத்தை ராக்கெட்டிற்கு அளிக்கும் விதத்தில் இந்தப் பகுதியில் பூமியின் சுழற்சி அமைந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவைப் போன்று, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையம், பிரெஞ்ச் கயானாவில் உள்ள குரோவ் விண்வெளி நிலையம் ஆகியவையும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன.
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவதாக ஒரு ஏவுதளத்தை அமைக்க, மத்திய அரசு கடந்த ஜனவரி 16ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஏவுதளம் மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளுக்கு ரூபாய் 3984.86 கோடிகள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறுகிறது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அது இந்திய விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் என்றும் இஸ்ரோ கூறுகிறது.பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவத் திட்டமிட்டுள்ளது, அதுமட்டுமல்லாது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திலும் இஸ்ரோ கவனம் செலுத்திவருகிறது. இந்த திட்டங்களுக்கு புதிய ஏவுதளம் உதவியாக இருக்கும் என இஸ்ரோ கூறுகிறது.