வயநாட்டில் 2 -ம்நாள் மீட்பு பணி - அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை !!
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்டன.கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தனர்.
ஒரே நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பற்றி அறியாமல், பலர் தங்களது வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்களில் சிலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். சிலர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுப்பட்டனர்.
முண்டகை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர்.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் தரைமட்டமாகின. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர்,130 ராணுவ வீரர்களும், பெங்களூருவில் இருந்து 150 ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர்.
மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு பணி தொடர்ந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர்.1000 பேர் மீட்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் 143 பேர் பலியானார்கள். அவர்களில் 39 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது. இன்றும் 2-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு வந்தடைந்தனர்.தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.