புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல 2-வது நாளாக தடை!!
புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுவை நோக்கி நகர்ந்து வருகிறது. இது புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால், தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 2-ந் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வரை 7.5 செ.மீ. மழை புதுவையில் பதிவானது. நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த தரைக்காற்று வீசியது. கடலில் அலைகளில் 5 அடிக்கு மேல் எழுந்தது. இதையடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாண்டி மெரீனா கடற்கரைக்கு செல்லும் பாதையையும் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். கடல் சீற்றத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுமக்கள் கடலில் இறங்காதவாறு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடும்படி உத்தரவிட்டார். பலத்த காற்று வீசியதில் இந்திராநகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே ராட்சத மரம் பெயர்ந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் இந்த மரத்தை வெட்டி அகற்றினர். மோசமான வானிலை நிலவுவதை குறிப்பிடும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை ஒன்றுடன், ஒன்று பிணைத்து கட்டி வைத்துள்ளனர். சோலை நகர், வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு உட்பட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு இழுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். புயல் கரையை கடக்குக்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நகர பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இல்லை. பொதுமக்களும் வீடுகளில் முடங்கினர். புதுவையில் இன்று காலை முதல் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருவதால் மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.புதுச்சேரியில் புயல், கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் ஆலோசனை நடத்தினார். புயல், கன மழையை எதிர்கொள்ள அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.