ஜெகன் மோகன் ரெட்டியின் மதுபான கொள்கைக்கு எதிராக நடவடிக்கை - சந்திரபாபு நாயுடு உத்தரவு !
ஆந்திர மாநிலத்தில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு அறிமுகப்படுத்திய மதுபான கொள்கையால் அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
''அமலாக்க துறை உதவியுடனும் விசாரணை நடத்தப்படும். போலி மது குடித்ததால் எத்தனை பேர் கடுமையான உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து கேட்கப்படும். கடந்த ஆட்சியில் பிரபல பீர் வகைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. உள்ளூர் வகைப்பீர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.'' இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், மதுபானம் பெயரில், 10 முதல் 25 ஆண்டுகள் வரை கடன் பெறப்பட்டுள்ளது என்றும் நாட்டு வரலாற்றில் மாநில அரசு செய்த மிகப்பெரிய மோசடி என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 2019 மற்றும் 2024 இடைப்பட்ட காலத்தில் 1.78 கோடி லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு இது குறித்து இன்னும் விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது என்றார்.