காவல் துறை உதவியோடு ஆம் ஆத்மி பிரசாரத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாராங்களை சீர்குலைத்து, வாக்காளர்களை அச்சுறுத்த பா.ஜ.க. அரசு காவல் துறையை பயன்படுத்தி வருவதாக அக்கட்சியின் நிறுவனரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாராங்களை சீர்குலைத்து, வாக்காளர்களை அச்சுறுத்த பா.ஜ.க. அரசு காவல் துறையை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "டெல்லி காவல் துறை முழுமையாக பா.ஜ.க.வுடன் தான் இருக்கிறது. மக்களின் பாதுகாப்புக்காக யாரும் இல்லை. எங்களது பிரசார கூட்டங்களில் இடையூறை ஏற்படுத்த தங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து நேரடி உத்தரவுகள் வருவதாக காவல் துறையினரே கூறுகின்றனர்." "வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்த விடாமல் தடுக்கப்படுவார்களோ என்ற அச்சம் எனக்கு எழுந்துள்ளது. காவல் துறையினர் ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசாரம் சார்ந்த முயற்சிகளை தடுக்க நினைக்கும் பா.ஜ.க.வினருக்காக பணியாற்றி வருகிறார்கள்," என்றார். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறை டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.