அம்பேத்கரை வணங்குபவர்களால் இனி பாஜகவை ஆதரிக்க முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்
அரசியலமைப்பு பற்றிய பா.ஜ.க.வின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து பாராளுமன்றத்தில் பேசியது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அம்பேத்கர் அபிமானிகளும் அமித் ஷா கருத்துக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்து தொடர்பாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "இந்த கடிதத்தை நான் உங்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயத்தில் எழுதுகிறேன், இது நமது அரசியலமைப்புச் சட்டம் மட்டுமல்ல, மரியாதை மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் மரபு. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பாபாசாகேப் பற்றி தெரிவித்த கருத்து நாடு முழுவதையும் திகைத்துப் போக செய்தது. அம்பேத்கர்-அம்பேத்கர் என்று கோஷமிடுவது சமீப காலங்களில் ஃபேஷன் ஆகிவிட்டது என்று கூறினார். இது அவமரியாதை மட்டுமல்ல, பாபாசாகேப் மற்றும் நமது அரசியலமைப்பு பற்றிய பா.ஜ.க.வின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கருக்கு "டாக்டர் ஆஃப் லா" விருது வழங்கப்பட்டது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, இந்திய அரசியலமைப்பை எழுதியவர். மேலும் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சம உரிமைகளை வென்றார். இவரைப் பற்றி அப்படியொரு கருத்தை கூறுவதற்கு பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? இது நாடு முழுக்க கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, அமித் ஷா அதை நியாயப்படுத்தியுள்ளார். அமித் ஷா-வின் கருத்தை பிரதமர் பகிரங்கமாக ஆதரித்தார், இது ஏற்கனவே காயமுற்றவர்களுக்கு மேலும் அவமானத்தை சேர்க்கும் வகையில் அமைந்தது. பாபாசாகேப்பை வணங்குபவர்களால் இனி எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். பாபாசாகேப் ஒரு தலைவர் மட்டுமல்ல, நம் தேசத்தின் ஆன்மா. பா.ஜ.க. தெரிவித்த இத்தகைய கருத்துக்கு, தீவிரமாக பதிலடி கொடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.