சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ! வலைவீசும் காங்கிரஸ், பாஜக..!
நாடு முழுவதும் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க ஒருபக்கம் இந்தியா கூட்டணி முயற்சியை துவங்கி உள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தயார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுபோல, பீகாரில் 14 தொகுதிகளை வென்றுள்ள நிதிஷ்குமாருக்கு மீண்டும் இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகலில் டெல்லி வருகிறார்.