வங்கக் கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்!!
வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு இன்னும் மழை கிடைக்கவில்லை. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் இன்னும் நிரம்பவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. பருவமழை காலம் தொடங்கி ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோண மலையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென் கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்து. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நெருங்கி வந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழந்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையையில் நகர்ந்து இலங்கையை தொட்டு தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். ஒருசில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும். சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.