அமைச்சர் ஸ்மிர்தி ராணிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தாரா ராகுல்?

வெடித்தது புதிய சர்ச்சை

Update: 2023-08-09 10:45 GMT

ஸ்மிர்தி ராணி  &  ராகுல் 

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், பெண் எம்.பிக்களை பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தார் என்ற புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி விரிவான தகவல்களை பார்ப்போம்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அப்போது, இந்தியா ஒரு குரல். இந்தியா நமது மக்களின் குரல். இதயத்தின் குரல். அந்தக்குரலை நீங்கள் மணிப்பூரில் கொலை செய்துள்ளீர்கள். இந்தியத்தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள் என குற்றஞ்சாட்டினார்.

நீங்கள் தேச துரோகி. நீங்கள் தேச பக்தர் அல்ல. நாட்டை நேசிப்பவர் அல்ல. நீங்கள் தேச துரோகி. நீங்கள் நாட்டை மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள். இவர்களின் ஆட்சியில் மணிப்பூரை மட்டுமல்ல, இந்தியாவை கொன்றுள்ளனர்.

பிரதமர் மோடியைப் பொறுத்தவரை மணிப்பூர் என்பது இந்தியாவின் அங்கம் இல்லை என்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால் இன்றைய உண்மை என்னவென்றால் மணிப்பூர் அழிந்துவிட்டது. மணிப்பூரை நீங்கள் இரண்டாக பிளவுபடுத்திவிட்டீர்கள். மணிப்பூரை பிரித்துவிட்டீர்கள். உடைத்துவிட்டீர்கள் என்று ராகுல் சரமாரியாக குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தி பேசிய போது அவையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இல்லை.  பாஜக உறுப்பினர்கள் ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.ராகுல் காந்தி பேசி முடித்ததும் அவையில் இருந்து வேகமாக வெளியேறினார்.

ராகுல் பேசி முடித்ததும் அவருக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். சீக்கிய கலவரத்தையும் காஷ்மீர் பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறியதையும் ஸ்மிர்தி ராணி குறிப்பிட்டார். ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி தமிழ்நாட்டில் உங்கள் கூடவே இருக்கும் திமுகவை பாருங்கள் என்றும்  ஸ்மிருதி ராணி விமர்சித்தார்.

இங்கு பேசிய ராகுல் காந்தி அவையில் இருந்து புறப்படும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நாடாளுமன்றத்திற்குள் பறக்கும் முத்தம் கொடுத்தது, பெண் விரோதப் போக்கு கொண்ட ஆணால் மட்டுமே முடியும், இந்த அநாகரீகத்தை செய்ய முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை, இந்த நாடாளுமன்றத்தில் இதற்கு முன் ஒருபோதும் நடந்ததே இல்லை என்று ஸ்மிரிதி இராணி கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்திற்குள் ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியுள்ள ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம்  புகார் அளித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் அநாகரிகமாக சைகை காட்டி, அவைக்குள் மோசமான நடத்தையை வெளிப்படுத்திய ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக  மக்களவையில் அனல் பறக்க ராகுல் காந்தி பேசிய நிலையில், அவரது ஆவேச பேச்சு நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறியதை திசை திருப்பும் வகையில், பெண் எம்.பிக்களை வைத்து பாஜக அவதூறு அரசியல் செய்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி மீது பறக்கும் முத்தம் புகார் கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிர்தி ராணியிடம், கடந்த 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தவர். அப்போது முதலே ராகுல் காந்தியை ஸ்மிர்தி ராணி கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், பொது இடங்களில் தனக்கு ஆதரவாக கூடுபவர்களையும், எதிராக கோஷம் போடுபவர்களையும் பார்த்து கையை அசைத்து, பறக்கும் முத்தம் கொடுப்பது ராகுல் காந்தியின் இயல்பான குணம் என்பதை நாடறியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News