ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ந்தேதி நீலகிரி வருகை!!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

Update: 2024-11-21 10:10 GMT

murmu

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக அவர் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம், கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலமாக குன்னூருக்கு செல்கிறார். ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார். 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி வாழ் பழங்குடி மக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று, அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு முடிந்ததும், மீண்டும் திருச்சி வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி பயணிக்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி. நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பொதுப்பணித்துறை சார்பில் ராஜ்பவனில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, நகராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்வது, சாலை சீரமைப்பு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அங்கு ஹெலிகாப்டர் தளம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஹெலிகாப்டர் தளத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனையும் மேற்கொண்டனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சுற்றியுள்ள பகுதியில் வெளியாட்கள் நுழையவும் போலீசார் தடைவிதித்தனர். ஜனாபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். தீட்டுக்கல், படகு இல்லம், ஹல்பங்க், கலெக்டர் அலுவலகம், ராஜ்பவன் வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலையோர முட்புதர்கள் அகற்றப்பட்டு, சரி செய்யப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி வருகையை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் வருபவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டைகளை எல்லாம் வாங்கி பார்த்து சோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

Tags:    

Similar News