காற்று மாசு எதிரொலி: வீட்டில் இருந்தே வேலை திட்டத்தை அறிமுகப்படுத்த டெல்லி அரசு முடிவு!!
காற்று மாசு அதிகரிப்பின் எதிரொலியாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளோம் என சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது. காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுவினால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர். இந்நிலையில், காற்று மாசு அதிகரிப்பின் எதிரொலியாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளோம் என சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் இயக்கும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.