அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்-ல் இணையலாம் - மத்திய அரசு! கண்டனம் தெரிவிக்கும் எதிர்கட்சிகள் !
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்.ல் சேர தடை கிடையாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடு விடுதலை அடைந்த போது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1948-ல் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் மீது அவ்வபோது தடை விதிக்கப்பட்டு, நீக்கப்பட்டாலும் கடந்த 1966ம் ஆண்டு மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் மத்திய அரசு பணியாளர்கள் பங்கேற்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இச்செயலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது: இது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். என்பது வேறு அரசு பணி என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சி இந்த தடையை நீக்கவில்லை. இப்போது இந்த தடையை நீக்க வேண்டிய அவசியம் என்ன? அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் எந்த ஒரு இயக்கத்திலும் சேரலாம். தற்போது அரசு ஊழியராக இருப்பவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும். என தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ''இத்தகைய அனுமதியானது அதிகாரிகளின் நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்கிவிடும். அரசு ஊழியராக இருப்பவர் எந்த ஒரு அரசியல் இயக்கத்தின் உறுப்பினராகவும் இருக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஏன் என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.