''மோடியைப் போல பரமாத்மா அல்ல.. நான் ஒரு சாமானியன்'' - ராகுல் காந்தி!
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், சி.பி.ஐ வேட்பாளர் ஆனி ராஜாவை தோற்கடித்தார். இதேபோல் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி இன்று வயநாடு வந்துள்ளார். மலப்புரம் எடவண்ணா பகுதியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்ட பின் ரோடுஷோவில் பங்கேற்று வருகிறார். இதில் கே.சி.வேணுகோபால், சென்னிதலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், ''நான் வெற்றி பெற்ற வயநாடு, ரேபரேலி இரு தொகுதி மக்களுமே மகிழ்ச்சி அடையும் வகையில் முடிவெடுப்போம். வயநாடு அல்லது ரேபரேலி எம்பியாக நீடிப்பது குறித்து மக்களுடன் ஆலோசித்துவிட்டுதான் முடிவெடுப்போம். பிரதமர் மோடி தமக்கு பரமாத்மா வழிகாட்டுவதாக சொல்கிறார். ஆனால் நான் ஒரு சாமானியன். சாதாரண மனிதன். எனக்கு பரமாத்மா எல்லாமே என் மக்கள்தான். ஆகையால் எங்கள் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை ஏற்றுக் கொண்டு கட்டுப்பட்டு செயல்படுவேன்.'' என தெரிவித்தார்.