களத்தில் இருந்து செய்திகளை வெளியிட வேண்டும் - முகமது யூனுஸ் அறிவுறுத்தல்!

Update: 2024-08-17 05:30 GMT

முகமது யூனுஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய பத்திரிகையாளர்கள் வங்கதேசத்திற்கு வந்து களத்தில் இருந்து செய்திகளை வெளியிட வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகியதோடு ஹெலிகாப்டர் மூலம் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு வங்கதேசத்தில் இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரும் பேராசிரியருமான முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (16.08.2024) தொலைப்பேசியில் உரையாடினார். அப்போது வங்கதேச ​​ஜனநாயகத்திற்குத் தேவையான நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான ஆதரவை இந்தியா வழங்கும் என்று பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். அதற்கு ''வங்கதேச சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த செய்திகளை இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன.

சிறுபான்மையினரின் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த செய்திகள் களத்தில் இருந்து வெளியிடப்பட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை குழுக்களின் பாதுகாப்பிற்கும் இடைக்கால அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்''  என்று பிரதமர் மோடியிடம் அவர் உறுதியளித்தார்.

Tags:    

Similar News