கேரளா வயநாடு நிலச்சரிவு - இலவச சேவையை மூன்று நாள் வழங்கும் ஏர்டெல் !!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை பெய்தது. அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.
அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தி ல் அடித்து செல்லப்பட்டனர்.
பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.