பெண் டாக்டர் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: மம்தா பானர்ஜி
பெண் டாக்டர் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தன்னார்வலரான சஞ்சய் ராய் என்பவரை மறுநாள் கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். அரசு ஆஸ்பத்திரியில் இரவு பணியில் இருந்த டாக்டருக்கு நேர்ந்த இந்த கொடூரம் மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சி.பி.ஐ. வழக்கு விசாரணை தொடர்ந்து சஞ்சய் ராய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை செஷன் கோர்ட் நீதிபதி நேற்று வழங்கினார். சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்றும் நீதிபதி கருத்து கூறி உள்ளார். இந்த தண்டனை விவரங்கள் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆர்.ஜி. கர் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பில் அரிதான வழக்கு அல்ல என்பதைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்! மரண தண்டனையை கோரும் அரிதான வழக்கு இது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அரிதான வழக்கு அல்ல என்று தீர்ப்பு எப்படி வந்தது? சமீபத்தில், கடந்த 3 (அ) 4 மாதங்களில், இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்ய முடிந்தது. ஏன்? இந்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்படவில்லை. இது மரண தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன். குற்றவாளியின் மரண தண்டனைக்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.