நிரவ் மோடியின் மேலும் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்!!

நிரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.29.75 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி இருக்கிறது.

Update: 2024-09-12 07:20 GMT

Nirav Modi

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இந்த மெகா மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேறிய அவரை லண்டன் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்து உள்ளனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நிரவ் மோடி மீதான விசாரணைகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், அவரது சொத்துகளை அமலாக்கத்துறை அடுத்தடுத்து முடக்கி வருகிறது. அந்தவகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள ரூ.2,596 கோடி மதிப்பிலான நிரவ் மோடியின் சொத்துகளை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருந்தது. மேலும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.692.90 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. மேலும் கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் அதன் கூட்டமைப்பு வங்கிகள் ரூ.1,052.42 கோடி மதிப்பிலான சொத்துகளை எடுத்துக்கொண்டன. இந்த நிலையில் நிரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ.29.75 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி இருக்கிறது. நிதி மோசடி சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்து உள்ளது. இதில் வங்கி டெபாசிட்டுகள், நிலம் மற்றும் கட்டிடம் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News