தட்கல் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி செயலிழப்பு; பயணர் அவேசம்!!
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஐஆர்சிடிசி தளம் செயலிழந்ததால் பயணர்கள் அவேசம் அடைந்தனர்.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வேயில் தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை உள்ளது. இது, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் முன்பதிவு செய்வதாகும். இந்த பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், இன்று தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஐஆர்சிடிசி தளம் செயலிழந்தது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், இ-டிக்கெட் சேவை மூலம் தற்போது முன்பதிவு செய்ய இயலாது என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வாடிக்கையாளர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அதாவது, ‘அவசர பயணத்துக்காக தட்கலில் முன்பதிவு செய்யும்போது, இதுபோன்று செயலிழந்து காணப்பட்டால் என்ன செய்ய முடியும்’ என்று அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ரயில்வேவின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, நீண்ட நாள்களாக தட்கல் நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் பயண சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பயனர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், உலகின் மிக சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட இந்தியாவின் ரயில்வே செயலியை இடையூறு இன்றி உபயோகிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.